சாலையோரத்தில் இன்று இரவு இருவர் பேசிக்கொண்டனர்:
இவர்: அண்ணே .. கண்ணன் அண்ணா இறந்துட்டார்..
அவர் : ஆமாம் சொன்னாங்கபா..
இவர் : சுகர்க்கு காலை எடுக்கணும்னு டாக்டர் சொன்னாராம்.. அதுக்கு நான் செத்துடுறேன்னு மருந்தை குடிச்சுருக்காராம்னே ..
அவர் : என்னத்த சொல்ல…
…
கீன் கீன்….
…
என ஒரு கார் சத்தமிட … அதற்கு வழிவிட விலகி தனது வண்டியை தள்ளிக்கொண்டே அவர் சென்றுவிட்டார். இவர் கைபேசியை எடுத்து பார்த்துக்கொண்டு தனியே நின்று கொண்டிருந்தார்.
பிறரை சார்ந்து உயிர்வாழும் நிலை ஒரு நிலையா என யோசித்து., தன்னையே மாய்த்துவிடும் மனநிலையில் ஒருவர் இருக்கிறார் என்றால்… அவரின் சொந்தம், சுற்றம் & நட்பு பற்றிய முழு புரிதலின் வெளிப்பாடு. துவண்டு கொண்டிருக்கும் மனிதர்க்கு ஆறுதல் தர எவருக்கும் நேரம், அவசியம், முக்கியம் இருப்பதில்லை.
உதவிக்கோ, ஆறுதலுக்கோ நெருங்கிய சுற்றம் – நட்பு இல்லாமல் தனியே வாழ்வதற்கு மாபெரும் மனோ திடம் வேண்டும். மணிக்கணக்கில் பேசி சிரித்த நட்பு கூட ஒரு காலத்தில் சம்பிரதாய ஒரு வரி மெசேஜ் அனுப்பும் வகையில் மாறலாம், அல்லது உங்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கலாம்.
மனிதர்கள் மனதில் நம் இடம் காலப்போக்கில் இடமாறலாம், தூக்கி எறியப்படலாம். அந்த வருத்தம் நீங்கள் இதுவரை பழகிய கால அளவை விட இரு மடங்கு அதிக காலம் உங்கள் மனதில் வடுவாக நீடிக்கலாம்…
நாம் யாரிடம் இருந்து அன்பு, அக்கறை எதிர்பார்க்கிறோம்.. அது கிடைக்கிறதா இல்லையா என அந்த நபரைப் பற்றி சிந்துகொண்டே இருப்பதய் விட….
நம் மீது வேறு ஒருவர் காட்டும் சிறு சிறு அன்பையும் அக்கறையையும் கவனித்து… அந்த நபர்களுக்கு அதிக அன்பை அளிப்போம். ஏன் என்றால் நம்மை பிறர் வருத்தப்பட வைக்கலாம். நம்மால் வேறு ஒருவர் வருத்தப்படக் கூடாது. நம்மை பிறர் புறக்கணிக்கலாம். நாம் எவரையும் புறக்கணிக்கக்கூடாது.